மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

புத்தளத்தில் தலை முடி உலர்த்தி (Hair Dryer) மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
புத்தளம், 5 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
குறித்த மாணவன் நேற்றைய தினம் தனது வீட்டில் குளித்து விட்டு தலை முடி உலர்த்தி மூலம் அவரது தலைமுடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்து, குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
 
எனினும் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
இதேவேளை உயிரிழந்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.