இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.

ஹமில்டன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 41.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வில் யங் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ஹென்றி சிப்ளே தெரிவுசெய்யப்பட்டார்.