தமது உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் (Wang Wenbin) இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கருத்து வெளியிட்ட அவர், “யுவான் வாங் 5 கப்பல், இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன், இந்தியா அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
யுவான் வாங் – 5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும்.
அவை எந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்காது என்றும் இது எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் தடுக்கப்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.
சில நாடுகள் கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதும், அதன் உள் விவகாரங்களில் மொத்தமாக தலையிடுவதும், பாதுகாப்புக் கவலைகள் என்று கூறுவதும் முற்றிலும் நியாயமற்றது என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .