காற்று மாசடைவு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் , சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் , மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய காற்று தரக்குறியீடானது கேகாலையில் 151 ஆகவும் , பதுளையில் 140 ஆகவும் , கண்டியில் 120 ஆகவும் , குருணாகல் மற்றும் புத்தளத்தில் 117 ஆகவும் , கொழும்பில் 111 ஆகவும் , அம்பாந்தோட்டையில் 106 ஆகவும் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியவில் 103 ஆகவும் காணப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இவற்றில் காற்றின் தரக் குறியீடு 151 புள்ளிகளைக் காண்பிக்கின்ற கேகாலை மாவட்டத்தில் உடல் நலத்திற்கு ஒவ்வாத நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டு அம்மாவட்டம் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை 101 புள்ளிக்கும் அதிக காற்று தரக் குறியீட்டைக் கொண்ட நகரங்களிலும் ஓரளவு உடல் நலத்திற்கு ஒவ்வாத நிலைமை காணப்படுவதோடு, இவை செம்மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் காணப்படும் நிலைமை அந்த பிரதேசத்தில் இடம்பெறும் செயற்பாடுகளின் அடிப்படையிலானதாக இருக்கலாம் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.