தப்பியோடிய வவுனியா சிறைக் கைதி  மண்டபம் முகாமில் தஞ்சம்

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகளில் ஒருவர் மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மன்னார் – தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன் என்பவரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளார்.

குற்றம் ஒன்றின் காரணமாக மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் தப்பிய செல்வராஜ் சிந்துஜன், கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் நேற்றைய தினம் (21.02.2023) அதிகாலை தஞ்சமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிந்துஜனின் தந்தை செல்வராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், இன்றைய தினம் (21.02.2023) காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதால் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் மண்டபம் அகதி முகாமில் உள்ளமை தெரிய வந்துள்ளது. குறித்த நபர் வவுனியா சிறைச்சாலையில் குற்றம் ஒன்றிற்றாகத் தடுத்து வைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மன்னாரை சேர்ந்த இருவர் கை விலங்குடன் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த நபர் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தப்பிய மற்றைய கைதியைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.