துப்பாக்கிச் சூடு ;பெண் காயம் ; சகோதரியின் கணவர் கைது

மாத்தறை, பங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதுடன், துப்பாக்கி சூடு மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதியகல பிரதேசத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பங்கம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக காயமடைந்த பெண்ணின் சகோதரியின் கணவர் மூலம் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 25 வயதுடைய தெதியகல, மலிந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே சம்பவத்தின் போது காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் நேற்று  திங்கட்கிழமை (28) காலை அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெனம பிரதேசத்தில் அக்குரஸ்ஸ பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய லேனம, அகுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பதுடன் சம்பவம் தொடர்பில் பங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது .