வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை எதிர்பார்த்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, இதனைக் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை பெற தடை நீக்கப்பட்டதாக கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடை நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது.
அண்மைய காலங்களில் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்த தடைகள் நீக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.