அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளான நிலையில், காரில் பயணித்த தம்பதியினரை அவர்கள் பயன்படுத்திய ஐஃபோன் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஃபோனில் உள்ள புதிய தொழில்நுட்பமான எஸ்.ஓ.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தம்பதியினர் பயணித்த கார் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கார் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் உள்ள மங்கி கேன்யனின் அடிப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.
உதவி செய்வதற்கு அருகில் யாரும் இன்றிய சமயத்தில் ஐபோன் 14 இல் உள்ள புதிய தொழில்நுட்ப வசதி மூலம் அவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்துள்ளது.
ஆப்பிளின் அவசர மையத்தில் இருந்து மதியம் 1.55 மணி அளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், துல்லியமான இருப்பிடம் மற்றும் தேடல் மீட்புக்குழுக்களை அனுப்ப உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக உலங்குவானூர்தியில் வந்த மீட்புக்குழுவினர் குறித்த தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.