நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலை மன். சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையின் கழக மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் மாணவி சயிந்தினி ஊடகத்துக்கு மேலும் தெரிவிக்கையில் ,
எனக்கு கல்வியும் . கிரிக்கெட் விளையாட்டும் இரு கண்கள். தேசிய மட்டத்தில் விளையாடுவதற்கு இப்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் வீரர்கள் தெரிவாகும் சூழ்நிலை உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் வடக்கிலிருந்து நான் முதல் பெண்மணியாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது.
நான் இப்பொழுது மன் பேசாலை சென்.பற்றிமா ம.ம.வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்று வருகின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பரீட்சையில் தோற்ற இருக்கின்றேன்.
இதன் பின் நான் கொழும்பில் தங்கியிருந்து சிறந்த பயிற்ச்சிகளை பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றேன். இருந்தும் எங்கள் வீட்டின் பொருளாதாரம் இதற்கு ஒரு தடையாக இருக்குமோ என்ற அச்சமும் இருக்கின்றது.
இந்த முயற்சிக்கு எனக்கு உதவிகள் கிடைக்குமாயின் எனது பாடசாலைக்கும் , மாவட்டத்துக்கும் , மாகாணத்துக்கும் பெருமையை ஈட்டிக் கொடுக்கும் கனவை நனவாக்கிக் கொள்வேன்.
சக வீராங்கனைகளுடன் கொழும்பில் நான் பயிற்சி பெறும்போது நான் மட்டுமே தமிழ் பெண்மணி. எனக்கு அவர்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாது. இதனால் எனக்கு ஆரம்பத்தில் பெரும் அச்சமாகக் காணப்பட்டது.
இருந்தும் எங்களுக்குள் மொழி புரிந்துணர்வு இல்லாதபோதும் அவர்கள் எனக்கு காட்டிய அன்பும் பாசமும் எனது அச்சத்தை தற்பொழுது தளர்த்தியுள்ளது.
எனக்கு இப்பொழுது சிங்கள மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டுள்ளது. நான் இதற்கான முயற்சியை நான் முன்னெடுக்க இருக்கின்றேன்.
உண்மையில் நான் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்குள் உட்புகுவதற்கு எனது பயிற்றுவிப்பாளர் ரி.பிறேமன் டயஸ் அண்ணா , பெனட் சேர் , ரூபன் சேர் , கொலின்றா ரீச்சர் எனது பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாகாண விளையாட்டு அதிகாரிகள் லங்கா சேர் . றொகான் சேர் . செல்வா சேர் , சுரேஸ் சேர் போன்ற பலரின் முயற்சியே இன்று நான் இந்த நிலையில் இருக்கின்றேன்.
உண்மையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் எனது பெற்றோர் இவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்காவிடில் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது என தெரிவித்தார்.