களுத்துறை பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் இரகசிய சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே பிரதான சந்தேகநபர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.