போதைப்பொருள் உட்கொண்ட உரிமம் இல்லாத பேருந்து சாரதி –  இருவர் மரணம்

அண்மையில் மலேசியாவின் கெந்திங் மலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்தது. அதில் சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

அந்தப் பேருந்தை ஓட்டியவருக்கு அதற்கான உரிமம் இல்லை என்றும் அவர் அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க மலேசிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் உட்கொண்டு, உரிமம் இல்லாது மேலும் பலர் சுற்றுலாப் பேருந்துகளை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நூற்றுக்கணக்கான பேருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

“நேற்றிரவு நிலவரப்படி 351 பேருந்துகள் சோதனையிடப்பட்டன. நான்கு ஓட்டுநர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் நால்வருக்குப் பொதுப் போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,” என்று ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் லோக் கூறினார்.

“பேருந்து ஓட்டுநர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஆறு பேர் போதைப்பொருள் உட்கொண்டது வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்,” என்றார் அமைச்சர் லோக்.

பேருந்து நிறுவனங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்வது உறுதி செய்யப்படும் என்றும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.