இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடி முடித்து சாதனை
சுவிட்சர்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற ரெசிஸ்ப்ரின்ட் இன்டர்நெஷனல் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து புதிய தெற்காசிய மற்றும் தேசிய சாதனைகளை நிலைநாட்டிய யுப்புன் அபேகோன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அத்துடன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிய முதலாவது தெற்காசிய வீரர் என்ற பெருமையையும் யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார். அப் போட்டியில் கியூபா வீரர் மெனா ரேனியர் (9.99 செக்) இரண்டாம் இடத்தையும் பிரான்ஸ் வீரர் ஸெஸே மெபா மைக்கல் (9.99 செக்.) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
அது மட்டுமல்லாமல் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை வேகமாக நிறைவு செய்த ஆசியர்களில் 4ஆவது இடத்தை யுப்புன் பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.06 செக்கன்களில் ஓடிமுடித்து நிலைநாட்டிய தனது சொந்த தெற்காசிய மற்றும் தேசிய சாதனையை இப்போது யுப்புன் அபேகோன் புதுப்பித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் ஸ்டொக்ஹோம் டயமண்ட் லீக்கில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.21 செக்கன்களில் ஓடி முடித்து 4ஆம் இடத்தைப் பெற்ற யுப்புன் அபேகோன், புதிய சாதனை நிலைநாட்டியதை அடுத்து பெர்மிங்ஹாமில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.