அம்பாறையில் யானை தாக்கி 6 மாத குழந்தை பலி

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் 6 மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று (08) உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதம் கொண்ட சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பமான கணவன் மனைவி அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவரின் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை பள்ளக்காடு பிரதேசத்தில் தங்கியிருந்து வேலை செய்துவரும் நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் பாயில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதையடுத்து குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை அங்கிருந்து மீட்டு அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.