சீனாவில் கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்!

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க 4 நாட்கள் பயணமாக சீனா சென்றார். இது, கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அவரது 2-வது வெளிநாட்டுப் பயணமாகும்.

ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவில் தங்கியிருக்கும் திசநாயக்கவின் பயணம், “இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று இலங்கை அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த பயணத்தின் போது, திசாநாயக்க, பரஸ்பர ஒத்துழைப்புள்ள பல்வேறு துறைகள் குறித்து அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது, மேலும் சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சீன நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதிபர் திசநாயக்கவின் சீன பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும்” என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் 3 அரசு தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐடிஎன் ஆகியவற்றை டிஜிட்டல்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விரைவுச் சாலை திட்டத்தையும் முடிக்க சீனாவின் உதவியை இலங்கை கோரும் என கூறப்படுகிறது.

தெற்கு துறைமுகமான ஹம்பாந்தோட்டையைச் சுற்றியுள்ள சீன தொழில்துறை மண்டலத்தையும் இந்தப் பேச்சுவார்த்தை உள்ளடக்கும். டிசம்பரில் டெல்லியில் இருந்து திசாநாயக்க திரும்பிய உடனேயே திசாநாயக்கவை சந்தித்த உயர் சீன அதிகாரி கின் போயோங், சீன நிறுவனங்கள் ஹம்பாந்தோட்டையில் வணிகம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

ஒரு காலத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த திசநாயக்க, தனது முதல் வெளிநாட்டு பயணமாக டெல்லி வந்தார். டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, “இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்” இலங்கையின் எந்த ஒரு பகுதியையும் பயன்படுத்த யாரையும் இலங்கை அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.

சீனாவின் ஆதரவாளரான மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலத்தில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றது. தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தையும் மேம்படுத்தியது.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழு இலங்கை அதிபர் திசநாயக்கவுடன் சீனா சென்றுள்ள நிலையில்  அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில்  உத்தியோகபூர்வ சந்திப்பு நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்!