இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன உட்பட அதன் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்தையின் போது, சாதகமான முடிவுகள் எட்டப்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் நேற்று இரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தனர். பின்னர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்து இந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டின் பல பாகங்களில் இன்று அதிகாலை முதல் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.