யாழில் இளம்பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட வைத்தியர் – முரண்பட்ட 8 பேர் கைது

யாழ்.கொடிகாமம் பகுதியில் அரச வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்த முயன்றதான குற்றச்சாட்டில் 8 இளைஞர்களை கொடிகாமம் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 23 வயதான யுவதி ஒருவர் தனது தாத்தாவினை அழைத்துக் கொண்டு குறித்த அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் வயோதிபரை பரிசோதித்த வைத்தியர் அவரை சிகிச்சைக்காக அனுப்பிவைத்த பின்னர் யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டதாகவும், யுவதி தொலைபேசி இல்லை எனக் கூறிய நிலையில் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி யுவதியிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மனவருத்தத்துடன் வீடு திரும்பிய யுவதி சம்பவத்தை தனது உறவுகளுக்கு தெரிவித்த நிலையில் 8 இளைஞர்கள் வைத்தியசாலைக்கு வந்து வைத்தியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை பொலிஸ் நிலையம் இழுத்துச் செல்லவும் முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியர் பொலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 8 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, 23 வயதான குறித்த யுவதியும் 38 வயதான வைத்தியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.