கடும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் நடந்தேறிய நயன் – விக்னேஷ் திருமணம்

Vignesh Shivan-Nayanthara wedding

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் கடும் கட்டுப்பாட்டுக்குள் நடந்துள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரசிகர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாயிலில் இருக்கும் பாதுகாவலர்களிடம் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன்களை ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்ததால் செல்போன்களை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக விஜபிகளுக்கு முதலைப் பண்ணை வழியாக தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை ஓரமாக உள்ளூர் வாசிகள் நடந்து சென்றதை அனுமதிக்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.