விளக்கமறியலில் யுவதி பலி – கொலையா? தற்கொலையா? விசாரணைகள்

பிடியாணை ஒன்று தொடர்பில் மரதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கோலை செய்து கொண்டுள்ளார். எனினும், இவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனக் கூறியே செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறித்த யுவதி தான் அணிந்திருந்த நீண்ட காற்சட்டையை தூக்கிட பயன்படுத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த செய்தியில்,

விபச்சார தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன் குறித்த வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் நீதிமன்றம் குறித்த யுவதிக்கு பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 8.45க்கு மரதானை பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதியை மரதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நேற்று காலை அவரை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி இருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 24 மணித்தியாலமும் பொலிஸ் அதிகாரிகள் தரித்திருக்கும் மரதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை சந்தேகத்திற்கிடமான ஒரு விடயம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த யுவதியை பொலிஸ் அதிகாரிகள் அடித்து கொலை செய்தனரா அல்லது தனது இரு பிள்ளைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் வெட்கி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பில் மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் கீழ் விசேட பொலிஸ் குழுவினர் பல பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசராணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்கள் தொடர்பிலான முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாறும் என சட்டத்தரணிகள் வலியுறுத்துகின்றனர்.