அரிசி பற்றாக்குறை!

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டு அரிசி, கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும் எனவும், இது அரசாங்கத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுவரை காலமும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படவில்லை எனவும், இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மேற்கொள்ளப்படும் பாரிய மோசடி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை,  இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சேமசிங்க இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஆதரிப்பதாக டட்லி சிறிசேன கூறுகிறார்.

கடந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்ட வகையில், தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளதையே இது காட்டுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.