விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் பலி

பொகவந்தலாவ மவெலி வனப்பகுதிக்கு தனது தந்தையுடன் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் மரத்திலிருந்து வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (02) மாலையில் இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்ததை சிறுவனின் தந்தை தோட்ட மக்களுக்கு அறிவித்ததை அடுத்து குறித்த சிறுவன் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டப்போது இடைவழியில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

பொகவந்தலாவ சென். விஜயன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சுரேந்திரகுமார் அபிஷாந்த் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும், தரம் 1 – 5 வரை சென்.விஜயன்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த இச்சிறுவன் தரம் 6 தொடக்கம் அனுராதபுரம் கெக்கிராவ பெப்டிஸ் தமிழ் மாகா வித்தியாலயத்தில் 2022ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஐந்து சகோதரர்களுடன் பிறந்த சுரேந்திரகுமார் அபிஷாந்த் தனது குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார். தனது குடும்பத்துடன் அனுராதபுரம் கெக்கிராவை பகுதியில் வசித்து வந்தவர்கள் தனது சொந்த ஊரான பொகவந்தலாவ சென்.விஜயன்ஸ் தோட்டத்திற்கு வருகைத் தந்து இரண்டு மாத காலப்பகுதியே ஆகிறது.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.