குடைபிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள்

சீரற்ற காலநிலை காரணமாக இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் பெய்த கனமழையின் காரணமாக சில தேர்வு நிலையங்களில் மழைநீர் தேங்கி நின்றது போன்ற பல புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து குடை பிடித்தவாறு பரீட்சை எழுதியதை அந்த புகைப்படங்களில் காணமுடிந்தது.

இதேவேளை, இவ்வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.

2021 டிசம்பரில் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கொவிட் தொற்று காரணமாக ஐந்து மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மே 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும் 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றியதோடு நாடளாவிய ரீதியில் 3842 பரீட்சை நிலையங்களிலும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் பரீட்சை நடாத்தப்பட்டது.