நாளை முதல் பாடசாலை ஆரம்பம்

நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் புதிய கட்டத்துக்கான பாடத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு சகல பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பஸ்களில் 6 ஆயிரம் பஸ்கள் மாத்திரமே நாளை சேவையில் ஈடுபடவுள்ளது என்று அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பாடசாலை மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.